நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதாகக் கூறப்படும் ஏர் ஏசியா நிறுவனம் தொடர்பான விமர்சனங்களுக்கு அதன் இணை நிறுவனர் டான் ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் கடும் பதிலடி கொடுத்துள்ளார்.
மலேசிய அரசாங்கம், ஏர் ஏசியாவின் உள்நாட்டு சந்தைப் பங்கைக் கையாள போட்டி விமான நிறுவனங்களிடம் உதவி கேட்டதாக வெளியான தகவல் முற்றிலும் தவறானது என அவர் திட்டவட்டமாக மறுத்தார்.
மத்திய கிழக்குப் போர் காரணமாக எண்ணெய் மற்றும் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், ஏர் ஏசியாவின் பங்கு விலை சுமார் 75 விழுக்காடு சரிந்துள்ளது. நிதி நெருக்கடி காரணமாக புதிதாக வழங்கப்பட்ட ஆறு விமானங்களில் சிலவற்றை நிறுவனம் விற்பனை செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று வியாழக்கிழமை ஏர் ஏசியாவின் பங்கு விலை 21 விழுக்காடு சரிந்து, நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்ததைத் தொடர்ந்து இந்தச் சந்திப்பு அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டது.
தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் பேசிய டோனி பெர்னாண்டஸ், ஏர் ஏசியா பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாகவும், கொரோனா கால நெருக்கடி தற்போதைய சூழலைவிட மிகவும் மோசமானதாக இருந்ததாகவும் கூறினார்.
“நாங்கள் பணத்தை நிர்வகிப்பதில் சிறந்தவர்கள்; எங்களிடம் வலுவான நிதி ஆதாரம் உள்ளது. இந்த நெருக்கடியிலிருந்தும் ஏர் ஏசியா முன்பைவிட வலுவாக மீண்டு வரும்” என்று அவர் உறுதியளித்தார்.








