முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் ரஸாக்கின் பொதுமன்னிப்பு கோரிக்கை தொடர்பாக, கூட்டரசுப் பிரதேச மன்னிப்பு வாரியம் இஸ்தானா நெகாராவில் இன்று திடீர் கூட்டத்தை நடத்தியது.
கடந்த செப்டம்பர் 11-ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் நஜிப்பின் மன்னிப்பு மனு ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்த ஒரு வாரத்திற்குள் மீண்டும் கூட்டம் நடைபெற்றுள்ளது.
இக்கூட்டத்தில் பிரதமர் துறையைச் சேர்ந்த கூட்டரசுப் பிரதேச அமைச்சர் ஹன்னா இயோ, அட்டர்னி ஜெனரல் டத்தோ முஹமட் டுசுகி மொக்தார் மற்றும் முன்னாள் போலீஸ் படைத் தலைவர் டான் ஶ்ரீ ரஸாருடின் ஹுசேன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
காலை சுமார் 9.40 மணியளவில் கூட்டம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து அதன் உறுப்பினர்கள் அரண்மனையில் இருந்து வெளியேறினர்.
எனினும், கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
இந்நிலையில், இந்தக் கூட்டம் நடைபெறுவதற்கு முன்பாகவே, நஜிப்புக்கு வீட்டுக் காவல் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் ஆவணம் ஒன்று சமூக ஊடகங்களில் பரவியது.
அந்த ஆவணத்தில் ஹன்னா இயோவின் கையெழுத்து இருப்பதாக கூறப்பட்டது. இதனை ஹன்னா இயோ திட்டவட்டமாக மறுத்து, தான் எந்தவொரு வீட்டுக் காவல் உத்தரவிலும் கையெழுத்திடவில்லை என்றும், மன்னிப்பு வாரியம் இன்னும் கூட்டப்படவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
மேலும், அந்த ஆவணம் போலியானது என்றும், அதை பகிர வேண்டாம் என்றும் அறிவுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், கோலாலம்பூரில் உள்ள லங்காக் டூத்தா பகுதியில் அமைந்துள்ள நஜிப்பின் இல்லத்திற்கு வெளியே ஊடகவியலாளர்கள் காலை முதல் திரளத் தொடங்கியுள்ளனர்.
நஜிப், எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனத்தின் 42 மில்லியன் ரிங்கிட் நிதியை முறைகேடாக பயன்படுத்திய வழக்கில் முதலில் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 210 மில்லியன் அபராதமும் பெற்றார்.
கடந்த 2024-ஆம் ஆண்டு மன்னிப்பு வாரியம் அவரது சிறைத்தண்டனையை 6 ஆண்டுகளாகவும், அபராதத்தை 50 மில்லியனாகவும் குறைத்தது.
பின்னர், மீதமுள்ள தண்டனையை வீட்டுக் காவலில் அனுபவிக்க அனுமதிக்கும் அரச ஆணை இருப்பதாக நஜிப் மற்றும் அவரது சட்டக் குழு தெரிவித்திருந்தனர்.
ஆனால், அந்த வீட்டுக் காவல் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கையில் கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் 22-ஆம் தேதி அவரது மனுவை நிராகரித்தது.
இந்நிலையில், தற்போது நடைபெற்ற மன்னிப்பு வாரியக் கூட்டத்தின் இறுதி முடிவு குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகாத நிலையில், நஜிப்புக்கு வீட்டுக் காவல் வழங்கப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல் எதுவும் இல்லை.








