கிள்ளான் பள்ளத்தாக்கில், 6 இடங்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில், ஆஸ்திரேலியா மற்றும் கனடா நாட்டைச் சேர்ந்த இருவர் தலைமையில் செயல்பட்டதாகக் கூறப்படும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் தயாரிப்பு கும்பலை போலீசார் முறியடித்தனர்.
இதில் 25 முதல் 48 வயதிற்க்குட்பட்ட 11 பேர் கைது செய்யப்பட்டதுடன், 35.24 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது குறித்து புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ ஶ்ரீ ஹுசேன் ஓமார் கான் கூறுகையில், கைது செய்யப்பட்ட ஆஸ்திரேலியா மற்றும் கனடா நாட்டுப் பிரஜைகள், அக்கும்பலின் முக்கிய மூளையாகவும், போதைப்பொருள் தயாரிக்கும் வேதியியலாளர்களாகவும் செயல்பட்டதாக தெரிவித்துள்ளார்.
அம்பாங்கில் வாடகைக்கு எடுக்கப்பட்ட பங்களா ஒன்று, போதைப்பொருள் தயாரிப்பு ஆய்வகமாக பயன்படுத்தப்பட்டதும், சுபாங் ஜெயாவில் மற்றொரு ஆய்வகத்தை அமைக்கத் தேவையான கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பறிமுதல் செய்யப்பட்டவற்றில் 344.89 கிலோ மெத்தாம்பெத்தாமின் தூள், 347.15 லிட்டர் திரவ வடிவ மெத்தாம்பெத்தாமின், 3.84 கிலோ எம்டிஎம்ஏ தூள், 630 கிராம் எரிமின் 5 மாத்திரைகள் மற்றும் 20 கிராம் கஞ்சாவும் அடங்கும்.








