முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் ரஸாக்கிற்கு நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, அவர் தற்போது அனுபவித்து வரும் சிறைத் தண்டனையின் எஞ்சிய காலமான வரும் 2028 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23-ம் தேதி வரை, வீட்டுக் காவலில் அனுபவிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த முடிவு, இன்று நடைபெற்ற கூட்டரசுப் பிரதேச மன்னிப்பு வாரியத்தின் 64-வது கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக பிரதமர் துறையின் சட்ட விவகாரப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், நஜிப் ரஸாக்கிற்கு இந்த நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பை வழங்கியுள்ளார்.
அதன்படி, 50 மில்லியன் ரிங்கிட் அபராதத்தை செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, நஜிப் ரஸாக்கின் பொதுமன்னிப்பு கோரிக்கை தொடர்பாக, கூட்டரசுப் பிரதேச மன்னிப்பு வாரியம் இஸ்தானா நெகாராவில் இன்று திடீர் கூட்டத்தை நடத்தியது.
கடந்த செப்டம்பர் 11-ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் நஜிப்பின் மன்னிப்பு மனு ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்த ஒரு வாரத்திற்குள் மீண்டும் இந்த கூட்டமானது நடத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் பிரதமர் துறையைச் சேர்ந்த கூட்டரசுப் பிரதேச அமைச்சர் ஹன்னா இயோ, அட்டர்னி ஜெனரல் டத்தோ முஹமட் டுசுகி மொக்தார் மற்றும் முன்னாள் போலீஸ் படைத் தலைவர் டான் ஶ்ரீ ரஸாருடின் ஹுசேன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நஜிப், எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனத்தின் 42 மில்லியன் ரிங்கிட் நிதியை முறைகேடாக பயன்படுத்திய வழக்கில் முதலில் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 210 மில்லியன் அபராதமும் பெற்றார்.
கடந்த 2024-ஆம் ஆண்டு மன்னிப்பு வாரியம் அவரது சிறைத்தண்டனையை 6 ஆண்டுகளாகவும், அபராதத்தை 50 மில்லியனாகவும் குறைத்தது.
பின்னர், மீதமுள்ள தண்டனையை வீட்டுக் காவலில் அனுபவிக்க அனுமதிக்கும் அரச ஆணை இருப்பதாக நஜிப் மற்றும் அவரது சட்டக் குழு தெரிவித்திருந்தனர்.
ஆனால், அந்த வீட்டுக் காவல் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கையில் கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் 22-ஆம் தேதி அவரது மனுவை நிராகரித்தது.
இந்நிலையில், தற்போது நடைபெற்ற மன்னிப்பு வாரியக் கூட்டத்தின் இறுதி முடிவானது, அவர் வீட்டுக் காவலில் எஞ்சிய சிறைத் தண்டனையை அனுபவிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.








