கோலாலம்பூர், அக்டோபர்.09-
நாளை தாக்கல் செய்யப்படவிருக்கும் 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் சிகரெட்டுகளுக்கு அதிக விற்பனை வரியை பிரதமரும் நிதியமைச்சருமான டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவிக்க வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
பல ஆண்டுகளாக சிகரெட்டுகள் விற்பனை வரிகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால், இதைச் செய்வதற்கான சரியான நேரம் இதுவே என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் கல்வி மற்றும் ஆய்வுப் பிரிவு அதிகாரி என்.வி.சுப்பாராவ் தெரிவித்தார்.
புகைப் பிடிப்பவர்கள் ஒவ்வொரு மாதமும் சுமார் 500 ரிங்கிட வரை சிகரெட் வாங்குவதற்கு செலவிடுகிறார்கள் என்பது தாங்கள் நடத்திய ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளதாக சுப்பராவ் குறிப்பிட்டார்.
அரசாங்கம் தற்போதைய ஐந்து மில்லியன் புகைப் பிடிப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க விரும்பினால், 2026 பட்ஜெட்டில் சிகரெட்டுகளுக்கு கட்டாய விற்பனை வரி விதிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.








