அலோர் ஸ்டார், ஜனவரி.21-
நாட்டில் 2027-ஆம் கல்வியாண்டில் 6 வயதில் மாணவர்கள் முதலாம் ஆண்டில் சேர்வதற்கு முன்னதாக அவர்களுக்கு ஒரு சிறப்புச் சோதனை நடத்தப்படும் என்று கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சீடேக் தெரிவித்துள்ளார்.
இந்தச் சோதனையானது மாணவர்களைத் தரம் பிரிப்பதற்காக அல்ல, மாறாக அவர்களின் வாசிப்பு, எழுதுதல் மற்றும் எண்ணும் திறன் எந்த அளவில் உள்ளது என்பதைத் தெரிந்து கொள்வதற்காக இந்த ஆரம்பக் கட்டச் சோதனை நடத்தப்படும் என்று அமைச்சர் விளக்கினார்.
குறிப்பாக, மாணவர்களின் அறிவு மற்றும் திறன்களை மதிப்பிடுவதற்காக இந்தச் சோதனை நடத்தப்படும். இந்தச் சோதனையில் அவர்கள் தேர்ச்சி பெற்றால் மட்டுமே சம்பந்தப்பட்ட மாணவர்கள் தங்கள் 6 வயதில் முதலாம் ஆண்டில் சேர்த்துக் கொள்ளப்படுவர் என்று ஃபாட்லீனா சீடேக் குறிப்பிட்டார்.
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமினால் நேற்று அறிவிக்கப்பட்ட 2026-2035-ஆம் ஆண்டுக்கான மலேசிய கல்வித் திட்டத்தின் முன்முயற்சிகளில் ஒன்றாக அடுத்த ஆண்டில் 6 வயது மாணவர்களுக்கு இந்த சோதனை நடத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
6 வயது மாணவர்கள் பள்ளிச் சூழலுக்குத் தயாராக இருப்பதை உறுதிச் செய்யவும், பாடத் திட்டத்தை அவர்கள் எளிதாகப் புரிந்து கொள்வதை உறுதிப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படவிருக்கிறது என்று ஃபாட்லீனா சீடேக் இன்று விளக்கம் அளித்துள்ளார்.








