Dec 9, 2025
Thisaigal NewsYouTube
உடை குறியீட்டு முறையைப் பின்பற்றும்படி மலாக்கா போலீசார் அறிவுறுத்து
தற்போதைய செய்திகள்

உடை குறியீட்டு முறையைப் பின்பற்றும்படி மலாக்கா போலீசார் அறிவுறுத்து

Share:

மலாக்கா, டிசம்பர்.09-

மலாக்கா மாநிலத்தில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு வருகின்றவர்கள் குறிப்பாக போலீஸ் முகப்பிடத்துடன் அலுவல் கொண்டுள்ள பொதுமக்கள், உடை குறியீட்டு முறைக்கான வழிகாட்டுதலைப் பின்பற்றுமாறு மாநில போலீஸ் தலைவர் ஸுல்கைரி முக்தார் கேட்டுக் கொண்டுள்ளார்.

பொதுச் சேவை இலாகாக்கள் மற்றும் அரசாங்க ஏஜென்சிகள் அனைத்தும் வாடிக்கையாளர்கள் உறவுகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, அரசாங்கத் தலைமைச் செயலாளர் வெளியிடுள்ள சுற்றறிக்கையில் இந்த வழிகாட்டு முறை கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளதாக ஸுல்கைரி முக்தார் தெரிவித்தார்.

இருப்பினும் ஆபத்து அவசர நிலைகள் அல்லது உடனடி போலீஸ் தலையீடு தேவைப்படும் சூழ்நிலைகளில் மட்டும் இந்த உடை குறியீட்டு முறையில் விலக்களிப்பு வழங்கப்படும் என்று இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மலாக்கா, ஜாசின் மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்கு நேற்று புகார் அளிக்க வந்த பெண் ஒருவர், அணிந்திருந்த ஆடை, அரசு வளாகங்களுக்குப் பொருத்தமற்றதாகக் கருதப்பட்டதால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக வெளிவந்த செய்தி தொடர்பில் ஸுல்கைரி முக்தார் இதனைத் தெரிவித்தார்.

இந்தா சம்பவம் நேற்று மாலை 5 மணியளவில் நடந்ததாகவும், அப்போது இரண்டு பெண்கள் சாலை விபத்து குறித்து புகார் அளிக்க வந்ததாகவும் அவர் விளக்கினார்.

இந்த விபத்தில் எந்தப் பெண்ணுக்கும் காயம் ஏற்படவில்லை. ஒரு பெண் முட்டிக்கு மேல் அணிந்திருந்த குட்டைப் பாவாடை, பொருத்தமற்றதாகக் கருதப்பட்டதால் அவரை மட்டும் வீட்டிற்குச் சென்று பொருத்தமான ஆடையில் வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News