Oct 11, 2026
Thisaigal NewsYouTube

இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம்: அச்சத்தில் ஆசிய விமான நிறுவனங்கள்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம்: அச்சத்தில் ஆசிய விமான நிறுவனங்கள்

கோலாலம்பூர், மே.07-

பாகிஸ்தான் பகுதிகளில் இந்தியா இன்று அதிகாலையில் அதிரடித் தாக்குதல் நடத்தியதையடுத்து சில ஆசிய விமான நிறுவனங்கள் அச்சத்தில் உள்ளன.

இரு நாடுகளுக்கும் இடையில் போர் ஏற்படும் அபாயம் இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகச் சில விமான நிறுவனங்கள் தங்களது பயணப்பாதையை மாற்றியுள்ளன அல்லது விமானச் சேவைகளை ரத்து செய்துள்ளன.

குறிப்பாக, ஆசிய நாடுகளிலிருந்து ஐரோப்பா செல்வது அல்லது ஐரோப்பாவிலிருந்து ஆசியா செல்லும் விமானங்களின் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளன.

தைவானின் ஏவா ஏர்வெய்ஸ் விமான நிறுவனம் பாதுகாப்பு காரணங்கள் கருதி தனது ஐரோப்பாவிற்கான சேவையில் மாற்றங்கள் செய்யவுள்ளதாக இன்று அறிவித்துள்ளது.

இன்று புதன்கிழமை வியன்னாவிலிருந்து புறப்பட்ட அதன் விமானம் மீண்டும் அந்நகரத்திற்கே திருப்பி விடப்பட்டது.

மேலும் தைப்பேயிலிருந்து மிலான் சென்ற விமானம், வியேன்னாவிற்குச் சென்றது. அங்கு எரிபொருள் நிரப்பப்பட்டு பின்னர் அது மிலான் நோக்கிச் சென்றது.

அதேபோல் கொரியன் ஏர் விமான நிறுவனம் சியோல், இன்சியோன் ஆகிய நகரங்களிலிருந்து துபாய் செல்லும் விமானங்களின் விமானப் பாதைகளை மாற்றியுள்ளது.

பாகிஸ்தான் வான் வழியாகச் செல்லாமல் மியன்மார், வங்காளதேசம், இந்தியா வான் வழியாகச் செல்ல கொரியன் ஏர் விமானம் முடிவு செய்துள்ளது.

தாய் ஏர்வெய்ஸ் நிறுவனமும் ஐரோப்பா மற்றும் தெற்காசியா செல்லும் அதன் விமானங்களின் பயணப் பாதையை இன்று மாற்றியுள்ளது. இதனால் சில விமானச் சேவைகள் தாமதம் ஆகலாம் என்று அது அறிவித்துள்ளது.

சீனா ஏர்லைன்ஸ், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இருப்பினும் அது குறித்து முழு விவரங்களை அது வெளியிடவில்லை.

தைவானின் Taoyuan அனைத்துலக விமான நிலையத்திலிருந்து லண்டன் செல்லும் சீனா ஏர்லைன்ஸ் விமானம் ரத்து செய்யப்பட்டது.

ஏற்கெனவே ர‌ஷ்யா-உக்ரேன் போரால் சில விமான நிறுவனங்கள் அந்த நாடுகளின் வான்வழியைத் தவிர்த்து வருகின்றன.

தற்போது இந்தியா-பாகிஸ்தான் இடையில் போர் பதற்றம் வெடித்துள்ளது. இது விமான நிறுவனங்களுக்குத் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →