மலாய்க்காரர்களுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருப்பது பிற இன மக்கள் அல்ல என்றும், அச்சமூகத்தினரிடையே அதிகரித்து வரும் போதைப் பொருள் பழக்கம் தான் என்றும் பிகேஆர் பொதுச் செயலாளரும், உள்துறை அமைச்சருமான டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
சிலர் ஜசெக கட்சியை மலாய்காரர்களுக்கு அச்சுறுத்தலாக சித்தரித்து வந்தாலும் கூட, உண்மையான அச்சுறுத்தல் என்பது இளைஞர்கள் போதைப்பொருள் பழக்கத்தில் சிக்கிக் கொள்வதே என்று மலாக்காவில் நடைபெற்றும் வரும் பிகேஆர் தேசிய மாநாட்டில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் மற்றும் தேசிய போதைப்பொருள் தடுப்பு முகமையின் தரவுகளின் படி, பெர்லிஸ், கெடா மற்றும் திரங்கானு ஆகிய மாநிலங்களில் ஒரு லட்சம் மக்களில் 1,000 பேருக்கு போதைப்பொருள் பயன்பாட்டு உள்ளதாகப் பதிவாகியுள்ளதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும், பலர் கல்வியை இடைநிறுத்தி வேலை வாய்ப்பின்றி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் மட்டுமே இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.








