கோலாலம்பூர், ஜனவரி.12-
எம். இந்திராகாந்திக்கும் அவரது மகள் பிரசன்னா டிக்சாவிற்கும் இடையிலான 17 ஆண்டு காலப் பிரிவை முடிவுக்குக் கொண்டு வர, பாஸ் கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் முன்வந்துள்ள உதவியை இந்திராகாந்தி நடவடிக்கை குழு இன்று வரவேற்றுள்ளது.
"எந்தவொரு உதவியும் நல்ல உதவியே" என்று குறிப்பிட்ட அந்தக் குழுவின் தலைவர் அருண் துரைசாமி, இந்திராகாந்தியை அவரது மகளுடன் மீண்டும் இணைக்க பாஸ் கட்சி உள்ளிட்ட எந்தவொரு தரப்பு வழங்கும் ஆதரவையும் இருகரம் கூப்பி வரவேற்பதாகத் தெரிவித்தார்.
முன்னதாக, பாஸ் கட்சியின் சுங்கை பூலோ தொகுதித் தலைவரும், அக்கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கின் மருமகனுமான ஜாஹாருடின் முஹமட், இந்த விவகாரத்தில் ஒரு மத்தியஸ்தராகச் செயல்படத் தான் தயாராக இருப்பதாக அறிவித்தார்.
இது மதம் அல்லது சட்டம் சார்ந்த பிரச்சினை அல்ல, மாறாக மனிதாபிமானம் மற்றும் தாய்மை உணர்வு சார்ந்தது என்று ஜாஹாருடின் சுட்டிக் காட்டினார். ஒரு தாயிடமிருந்து குழந்தையைப் பிரிப்பதை இஸ்லாம் ஒரு போதும் அனுமதிக்காது என்றும் அவர் கூறினார்.
தனது மகள் எங்கே இருக்கிறார், எந்த மதத்தில் இருக்கிறார் என்பதைப் பற்றி கவலைப்படவில்லை என்றும், 11 மாதக் குழந்தையாகப் பிரிந்த தனது மகளை ஒரு முறையாவது நேரில் சந்திப்பதே தனது ஒரே விருப்பம் என்றும் இந்திராகாந்தி தெளிவுபடுத்தியுள்ளார்.








