Jul 18, 2026
Thisaigal NewsYouTube
ஈப்போவில் 2-வது தேசிய திருமுருகன் மாநாடு: டத்தோ அ. சிவநேசன் அழைப்பு
தற்போதைய செய்திகள்

ஈப்போவில் 2-வது தேசிய திருமுருகன் மாநாடு: டத்தோ அ. சிவநேசன் அழைப்பு

Share:

பேராக் மாநில அரசின் ஆதரவுடன், சமூக ஒற்றுமை மற்றும் ஆன்மிக விழிப்புணர்வை வலுப்படுத்தும் 2-வது தேசிய திருமுருகன் மாநாடு வரும் ஜூலை 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் ஈப்போ கல்லுமலை சுப்பிரமணியர் ஆலயத்தில் நடைபெறவுள்ளது.

தேசிய திருமுருகன் மாநாட்டிற்கான அறிமுக விழா ஈப்போவில் உள்ள எக்ஸெல்சியர் ஹோட்டலில் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் தலைமையில் நடைபெற்றது.

இம்மாநாடு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டத்தோ அ. சிவநேசன், "மலேசிய இந்து சமூகத்தின் ஆன்மிக மற்றும் பண்பாட்டு வரலாற்றில் இம்மாநாடு ஒரு புதிய மைல்கல்லாகும். இந்தியா, இலங்கை, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருந்து புகழ்பெற்ற ஆன்மிக அறிஞர்கள் மற்றும் சீர்காழி சிவசிதம்பரம், பேராசிரியர் டி. சிவக்குமார் உள்ளிட்டோர் இதில் பங்கேற்கின்றனர். தமிழ்ப்பள்ளி மாணவர்களின் கலை, இலக்கிய நிகழ்ச்சிகளும் இதில் இடம்பெறவுள்ளன" என்றார்.

மேலும், "இது முழுக்க முழுக்க அரசியல் சார்பற்ற ஒரு ஆன்மிக நிகழ்வு. சுமார் 2,500 பேர் அமரக்கூடிய வசதியுடன், பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் இரு நாட்களும் இலவச சிற்றுண்டி மற்றும் மதிய உணவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே, பொதுமக்கள் அனைவரும் அரசியல் வேறுபாடுகளை மறந்து குடும்பத்துடன் திரளாகக் கலந்துகொள்ள வேண்டும்" என டத்தோ சிவநேசன் அழைப்பு விடுத்துள்ளார்.

Related News