கோலாலம்பூர், டிசம்பர்.16-
கடந்த 1957 ஆம் ஆண்டு மலாயா கூட்டமைப்பு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட, நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடங்களில் ஒன்றான ஸ்ரீ நெகாராவின் மறுசீரமைப்புப் பணிகளை கஸானா நேஷனல் வெற்றிகரமாக நிறைவுச் செய்துள்ளது.
கஸானா-வின், டானா வாரிசான் திட்டத்தின் ஒரு பகுதியாக, கடந்த 10 மாதங்களாக நடைபெற்று வந்த மறுசீரமைப்புத் திட்ட பணிகளின் நிறைவையடுத்து, கட்டிடத்தின் திறப்பு விழா பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் முன்னிலையில் நடைபெற்றது.
அரசாங்கம் இக்கட்டிடத்தைப் பாதுகாக்கும் பொருட்டு, இறையாண்மை முதலீட்டு நிதியைப் பயன்படுத்தியதையடுத்து, மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக கஸானா நிர்வாக இயக்குநர் அமிருல் ஃபெய்சால் வான் ஸாஹிர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஸ்ரீ நெகாராவின் மறுசீரமைப்பு என்பது கஸ்னாவிற்குக் கிடைத்த பாக்கியம் என்று குறிப்பிட்ட அமிருல் ஃபெய்சால், இதன் மூலம் தேசத்தை வடிவமைத்த கதைகளை உயிர்ப்பித்த உணர்வு கிடைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.








