புத்ராஜெயா, ஆகஸ்ட்.25-
தாம் திவாலாகி விட்டதாகத் தவறாக அடையாளம் காணப்பட்டு, வெளிநாட்டிற்குச் செல்வதிலிருந்து விமான நிலையத்தில் தடுக்கப்பட்தைத் தொடர்ந்து குடிநுழைவுத்துறைத் தலைமை இயக்குநர் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக இல்லத்தரசி எஸ். சுமதி தொடுத்திருந்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று வெற்றி பெற்றுள்ளார்.
இந்த வழக்கு வெளிப்படையான மற்றும் தொடர்வதற்கு தகுதியற்ற வழக்கு என்று தீர்மானிக்க முடியாது. மாறாக, முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு என்று மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற புத்ராஜெயா அப்பீல் நீதிமன்ற நீதிபதி டத்தோ கோலின் லாரன்ஸ் செகுவேரா தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
இந்த வழக்கில் எந்த குடிநுழைவுத்துறை அதிகாரி சம்பந்தப்பட்டுள்ளார் என்பதை சுமதி துல்லியமாகக் குறிப்பிடவில்லை என்று காரணம் கூறி, அந்த மாதுவின் வழக்கை வெறுமனே தள்ளுபடி செய்து விட முடியாது என்று அவர் குறிப்பிட்டார்.
குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் அனைத்து தேவைகளையும் சுமதி பூர்த்தி செய்துள்ளார். தனது வழக்கு மனுவில் குடிநுழைவுத்துறையின் தலைமை இயக்குநரை, அத்துறையின் முக்கிய அதிகாரியாக அவர் பெயர் குறிப்பிட்டு, சரியாக அடையாளப்படுத்தியுள்ளார் என்று டத்தோ கோலின் லாரன்ஸ் சுட்டிக் காட்டினார்.
இதன் தொடர்பில் வழக்கு செலவுத் தொகையாக சுமதிக்கு மலேசிய குடிநுழைவுத்துறை 15 ஆயிரம் ரிங்கிட்டை வழங்க வேண்டும் என்பதுடன் இவ்வழக்கு முழுமையாக விசாரிக்கப்படுவதற்கு மீண்டும் செஷன்ஸ் நீதிமன்றத்திற்கே அனுப்புவதாக நீதிபதி தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
குடிநுழைவுத்துறைக்கு எதிராக 44 வயது சுமதி தொடுத்துள்ள வழக்கு மனுவில் பிரதிவாதியாக சம்பந்தப்பட்ட அதிகாரியின் பெயரை அவர் துல்லியமாகக் குறிப்பிடாத காரணத்தினால் கடந்த 2024 ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதி செஷன்ஸ் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது.
அந்தத் தீர்ப்பை உயர் நீதிமன்றம் நிலை நிறுத்தியதைத் தொடர்ந்து அத்தீர்ப்புக்கு எதிராக சுமதி அப்பீல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.








