சிகாமட், ஆகஸ்ட்.27-
கடந்த ஞாயிற்றுக்கிழமைக்குப் பிறகு ஜோகூர் மாநிலத்தில் மூன்றாவது முறையாகவும், சிகாமட்டில் இரண்டாவது முறையாகவும் இன்று காலையில் ஏற்பட்ட மிதமான நில நடுக்கத்தில் எந்தவொரு பொருட்சேதமும் ஏற்படவில்லை என்று அறிவிக்கப்பட்டது.
மக்கள் சற்று அச்சத்தில் இருந்த போதிலும் எந்தவொரு பாதிப்பும் இதுவரை ஏற்படவில்லை என்று சிகாமட் மாவட்ட பேரிடர் நிர்வாகக் குழு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. எனினும் சிகாமட்டில் மலேசிய வானிலை ஆய்வுத்துறையான மெட்மலேசியா மூலமாக பேரிடர் நிர்வாகக் குழு, நிலைமையை மிக அணுக்கமாகக் கண்காணித்து வருவதாக அது தெரிவித்துள்ளது.
இன்று காலையில் ஏற்பட்ட நில நடுக்கத்தைத் தொடர்ந்து சிகாமட்டிற்கு பாதுகாப்பு ஏஜென்சிகள் விரைந்துள்ளனர். சிகாமட் எல்லா நிலைகளிலும் பாதுகாப்பாக இருப்பதை அவர்கள் உறுதிச் செய்வர் என்று பேரிடர் நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது.
சிகாமட்டில் இன்று காலை 8.59 மணியளவில் ஏற்பட்ட இந்த மிதமான நில நடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆகப் பதிவுச் செய்யப்பட்டுள்ளது. அது 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக மெட்மலேசியா அறிவித்திருந்தது.








