கோலாலம்பூர், ஜனவரி.29-
நாடு முழுவதும் நேற்று ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட 'Op Pintas Khas' என்ற அதிரடி சோதனையில், கட்டாய உழைப்பிற்காகச் சுரண்டப்பட்ட 138 வெளிநாட்டினர் மீட்கப்பட்டனர்.
இவர்களில் 12 முதல் 17 வயதுக்குட்பட்ட 57 சிறுவர், சிறுமியர் அடங்குவர் என புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ குமார் முத்துவேல் தெரிவித்துள்ளார்.
மீட்கப்பட்டவர்களில் 75 பேர் மியான்மர் நாட்டைச் சேர்ந்தவர்கள். ஏனையோர் இந்தோனேசியா, வங்காளதேசம், பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசியாவைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களில் ஒரு மாற்றுத்திறனாளி சிறுவனும் அடங்குவார் என்று டத்தோ குமார் குறிப்பிட்டார்.
தொழிற்சாலைகள், தோட்டங்கள் மற்றும் சேவைத் துறைகள் என நாடு முழுவதும் மொத்தம் 77 இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. இந்தச் சுரண்டலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 42 உள்ளூர்வாசிகள் மற்றும் 25 வெளிநாட்டினர் உட்பட மொத்தம் 67 முதலாளிகள் மற்றும் மேற்பார்வையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அடையாள ஆவணங்களைப் பறித்து வைத்தல், ஊதியம் வழங்காமை, மிக அதிக நேரம் வேலை வாங்குதல் மற்றும் மோசமான தங்குமிட வசதி போன்ற கட்டாய உழைப்பிற்கான அடையாளங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக டத்தோ குமார் தெரிவித்தார்.








