குவாந்தான், ஜனவரி.29-
வீடற்ற ஒருவருக்கு எலும்புகள் கலந்த சோற்றை வழங்கும் அருவருப்பான காணொளியைப் பதிவிட்டதற்காக, 23 வயது சமூக ஊடகப் பிரபலம் Tang Sie Luk என்பவருக்கு குவாந்தான் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 40 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதித்துள்ளது. கடந்த 2025 ஆகஸ்ட் 4-ஆம் தேதி இன்ஸ்டாகிராமில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோ, ஒருவரைத் துன்புறுத்தும் நோக்கம் கொண்டது என நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
அபராதத்தைச் செலுத்தத் தவறினால் அந்த நபருக்கு நான்கு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் அந்த அபராதத் தொகையைச் செலுத்தினார்.
மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்தின் துணை பப்ளிக் பிராசிகியூட்டர் Fadhli Ab Wahab நீதிமன்றத்தில் வாதிடுகையில், சம்பந்தப்பட்ட நபரின் இந்தச் செயல் சமுதாயத்திற்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்பதால் கடுமையான தண்டனை வழங்கக் கோரினார்.
குற்றவாளி தரப்பில் வழக்கறிஞர் எவரும் முன்னிலையாகாத நிலையில், தான் செய்த தவறுக்காக மன்னிப்பு கோருவதாகவும், இனி இது போன்ற செயல்களில் ஈடுபட மாட்டேன் என்றும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.








