கோலாலம்பூர் செந்தூலில் மூன்று இலங்கைப் பிரஜைகள் கொலை செய்யப்பட்டதற்கு பின்னணி காரணம் கடன் பிரச்னையே என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ அல்லைடீன் அப்துல் மஜிட் தெரிவித்துள்ளார்.
மூவர் கொலை தொடர்பான விசாரணைக்கு தீர்வு காணப்பட்டு விட்டதாகவும், இனி சந்தேகப் பேர்வழிகளை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டுவதுதான் அடுத்த கட்டப் பணியாகும் என்று இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அலாவுதீன் குறிப்பிட்டார்.
இந்த கொலை தொடர்பில் ஓர் இலங்கை தம்பதியர் உட்பட மொத்தம் எட்டு பேர் கைது செய்யப்பட்டதாகவும், இதில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட தம்பதியரில், கணவன் கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி உயிரிழந்ததாக அவர் மேலும் கூறினார்.எட்டு பேரில் நால்வர் விசாரணைக்கு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவசியம் ஏற்படும் பட்சத்தில் அவர்கள் போலீஸ் சாட்சியாக நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவர் என்றும் அவர் விளக்கினார். தவிர கொலையுண்ட மூவரும் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பதற்கு எந்தவொரு தடயமும் இல்லை. அவர்கள் தலையில் பிளாஷ்டிக் பையினால் கட்டப்பட்டு, மூச்சடைக்கச் செய்யப்பட்டுள்ளனர் என்பது சவப்பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக அலவுதீன் தெரிவித்தார்.








