கோலாலம்பூர் சீன அசெம்பிலி மண்டபத்தின் நிலப் பிரீமியம் 4.67 மில்லியன் ரிங்கிட்டிலிருந்து வெறும் 1,000 ரிங்கிட்டாகக் குறைக்கப்பட்டதற்கு, நிலத்தின் பயன்பாட்டு வகை வணிக நிலையிலிருந்து நிறுவனப் பயன்பாடாக மாற்றப்பட்டதே காரணம் என பிரதமர் துறையின் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் ஹன்னா இயோ தெரிவித்துள்ளார்.
நிலத்தின் பயன்பாடு மாற்றப்பட்டதால், அதில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் அல்லது வணிக வளாகங்கள் போன்ற வர்த்தகத் திட்டங்களை இனி உருவாக்க முடியாது என்றும், வரலாற்றுச் சிறப்புமிக்க நிறுவனக் கட்டடமாகவே பராமரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் விளக்கினார்.
மேலும், 2007ஆம் ஆண்டு முதல் பாரம்பரியக் கட்டடமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள கோலாலம்பூர் சீன அசெம்பிலி மண்டபம், இலாப நோக்கமற்ற அமைப்பு என்பதையும் நிலக் குத்தகையின் எஞ்சிய காலத்தையும் கருத்தில் கொண்டு பிரீமியம் குறைப்பு கோரியதாக அவர் கூறினார்.
இதனைப் பரிசீலித்த குழு, நிலத்தின் தற்போதைய நிறுவனப் பயன்பாட்டு நிலையைக் கருத்தில் கொண்டு பிரீமியத்தை 1,000 ரிங்கிட்டாகக் குறைக்க ஒப்புதல் அளித்ததாக ஹன்னா இயோ தெரிவித்தார்.
இதற்கிடையில், கோலாலம்பூர் சீன அசெம்பிலி மண்டபத்தின் நிலத்திற்கான 99 ஆண்டு குத்தகைப் புதுப்பித்தலுக்கும் அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.








