வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு வியாபாரிகள் மற்றும் சாலையோர வியாபாரிகளின் நிதிச் சுமையைக் குறைக்க உதவிகள் வழங்குவது குறித்து சிலாங்கூர் மாநில அரசாங்கம் பரிசீலித்து வருகின்றது.
குறிப்பாக, கோலா சிலாங்கூர் பகுதியில் பாதிக்கப்பட்ட வியாபாரிகளின் இழப்புகள் குறித்த தகவல்கள் திரட்டப்பட்டு, அதற்கேற்ப உதவிகள் தீர்மானிக்கப்படும் என அம்மாநில மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.
மேலும், 500, 1,000 அல்லது 2,000 ரிங்கிட் என ஒருமுறை வழங்கப்படும் நிதியுதவி சில வியாபாரிகளுக்கு போதுமானதாக இருக்காது என்பதால், அவர்களின் மாதாந்திர நிதிச் சுமையைக் குறைக்கும் மாற்று உதவித் திட்டங்களும் பரிசீலிக்கப்படும் என்றார்.
அதேவேளையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்ட கூடுதல் 500 ரிங்கிட் உதவியும் விரைவாகச் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.
ஷா ஆலாம், டத்தாரான் கெமெர்டெக்காஆனில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வரும் 2026-ஆம் ஆண்டு மாநில அளவிலான சிறு வியாபாரிகள் மற்றும் சாலையோர வியாபாரிகள் தின நிறைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமிருடின், இரண்டு நாட்களில் 15,000 பேர் கலந்து கொண்டதுடன், கிட்டத்தட்ட 2 லட்சம் ரிங்கிட் விற்பனை பதிவானதாகவும் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சி சிறு தொழில் முனைவோருக்கு சந்தைப்படுத்தல் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப வாய்ப்புகளை ஏற்படுத்தும் தளமாக அமைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








