மலேசியாவில் பல ஆண்டுகளாக பிரதமர் மற்றும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த சில அதிகாரங்கள், தமது தலைமையிலான ஆட்சியில், நாடாளுமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக நாடாளுமன்ற சேவைகள் சட்டம் மூலம், இதுவரை பிரதமர் மற்றும் அரசாங்கம் பயன்படுத்தி வந்த பல அதிகாரங்கள் மக்களவை மற்றும் அதன் சபாநாயகருக்கு வழங்கப்பட்டுள்ளதாக அன்வார் குறிப்பிட்டுள்ளார்.
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்று வரும் 49-ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொண்ட அவர், இன்று ஞாயிற்றுக்கிழமை அங்குள்ள மலேசியத் தூதரகத்தில் நடைபெற்ற இரவு விருந்தில் உரையாற்றிய போது இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த 30 முதல் 40 ஆண்டுகளாக இது குறித்து விவாதிக்கப்பட்டு வந்தாலும் கூட, முந்தைய பிரதமர்களும் அரசாங்கங்களும் தங்களிடம் இருந்த அதிகாரங்களை விட்டுக் கொடுக்கத் தயங்கியதையும் அன்வார் சுட்டிக் காட்டியுள்ளார்.
எந்தவொரு பிரதமரும் இத்தகைய அதிகாரங்களை மாற்ற விரும்புவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்களவைக்கும், சபாநாயகருக்கும் அதிகாரம் வழங்கும் இது போன்ற சட்ட சீர்திருத்தங்களின் முக்கியத்துவத்தைப் பலரும் உணர்வதில்லை என்றும் அன்வார் விளக்கமளித்துள்ளார்.








