மலேசியாவும் கனடாவும் எரிசக்தி, டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளதாகப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
49-ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டையொட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை கனடா பிரதமர் மார்க் கார்னெயுடன் நடைபெற்ற இருதரப்புச் சந்திப்பின் போது இது குறித்து விவாதிக்கப்பட்டதாக அன்வார் தெரிவித்துள்ளார்.
மேலும், இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் மற்றும் வட்டார, அனைத்துலக விவகாரங்கள் குறித்தும் இரு தலைவர்களும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில், மலேசியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த தகவல்களை, கனடா பிரதமருடன் பகிர்ந்து கொண்டதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவுகளின் 70-ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு புதிய ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்தும் ஆராயப்பட்டதாக அன்வார் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இரு நாடுகளின் பரஸ்பர நலன் மற்றும் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு கனடாவுடனான நட்புறவையும் ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்த மலேசியா உறுதி பூண்டுள்ளதாகவும் அவர் விவரித்துள்ளார்.








