பினாங்கு மாநிலம், புக்கிட் மெர்தாஜாம் அருகே புக்கிட் தெங்கா பகுதியில் உள்ள எண்ணெய் சேமிப்புக் கிடங்கில் நேற்று பிற்பகல் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 41 வயது ஆடவர் ஒருவர் உயிரிழந்தார்.
சம்பந்தப்பட்ட எண்ணெய் சேமிப்புக் கிடங்கில் பணியாற்றிய சக ஊழியர் ஒருவரே இந்தத் துப்பாக்கிச்சூட்டை நடத்தியிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், 40 வயதுடைய சந்தேக நபர், பாதிக்கப்பட்டவரை நோக்கி மூன்று முறை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டென்னிஸ் லிம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், உயிரிழந்தவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் டென்னிஸ் லிம் தெரிவித்துள்ளார்.








