தாய்லாந்தின் ஹாட் யாய் நகரில் நேற்று இரவு வாகன அணிவகுப்பின் போது, சமூக ஊடகத்திற்காக காணொளி பதிவு செய்த போது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்திய மூன்று மலேசிய சுற்றுலாப் பயணிகள் உட்பட நான்கு பேருக்கு மொத்தம் 16,000 பாட் (baht) அதாவது மலேசிய மதிப்பில் 1,447 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் நடந்த இச்சம்பவத்தில், மூன்று மலேசியப் பதிவு எண் கொண்ட கார்களும் ஒரு தாய்லாந்து காரும் பலமுறை யு-டர்ன் செய்து, அதிக சத்தத்துடன் எஞ்சினை இயக்கி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
நால்வரும் குற்றத்தை ஒப்புக் கொண்டு தங்களது அபராதம் செலுத்திய பின்னர் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுவிக்கப்பட்டனர்.
மேலும், தாய்லாந்து சட்டங்களை மதித்துப் பின்பற்றுமாறு வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.








