சிறு தொழில்முனைவோர் எந்தவொரு பெரிய முதலீடும் இன்றி இணையவழி நேரலை விற்பனையை மேற்கொள்ளும் வகையில், பினாங்கு மாநிலம், புக்கிட் மெர்தாஜாம், பண்டார் பெர்டா பகுதியில் புதிய டிக்டாக் ஷாப் நேரலை மையம் திறக்கப்பட்டுள்ளது.

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்டீவன் சிம் சீ கியோங் இந்த மையத்தை இன்று அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.
இதன் மூலம், தெக்குன் நேஷனல் மற்றும் டிக்டாக் ஷாப் மலேசியா இணைந்து செயல்படுத்தும் இத்திட்டத்தின் கீழ் திறக்கப்படும் ஆறாவது மையம் இதுவாகும்.
இந்த மையத்தில் இரண்டு நேரலை விற்பனை ஸ்டுடியோக்களும் ஒரு பயிற்சி மையமும் அமைக்கப்பட்டுள்ளன.

சிறு தொழில்முனைவோர் ஒவ்வொரு முறையும் இரண்டு மணி நேரம் வரை இந்த ஸ்டுடியோக்களை இலவசமாகப் பயன்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறுகிய காணொளி தயாரிப்பு, இணையவழி சந்தைப்படுத்தல் மற்றும் நேரலை விற்பனை நுட்பங்கள் குறித்த பயிற்சிகளும் இங்கு வழங்கப்படுகின்றன.
இதன் மூலம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழில்முனைவோர் பயன் பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இந்தக் கூட்டுத் திட்டத்தில் பங்கேற்ற 1,300-க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர், கடந்த செப்டம்பர் மாதம் வரை டிக்டாக் ஷாப் தளத்தின் மூலம் 45 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான விற்பனையைப் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டிஜிட்டல் தளங்கள் மூலம் சிறு வணிகர்கள் நாடு முழுவதும் வாடிக்கையாளர்களைச் சென்றடைய முடியும் என்றும், அவர்களுக்கான பயிற்சி, நிதி உதவி மற்றும் சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்த அரசாங்கம் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்துள்ளார்.








