Nov 16, 2026
Thisaigal NewsYouTube

ஆரோக்கியமற்ற உணவு சந்தைப்படுத்தலுக்கு கட்டுப்பாடு: 2027-ல் புதிய ஊட்டச்சத்து சட்டம் கொண்டுவர மலேசியா திட்டம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஆரோக்கியமற்ற உணவு சந்தைப்படுத்தலுக்கு கட்டுப்பாடு: 2027-ல் புதிய ஊட்டச்சத்து சட்டம் கொண்டுவர மலேசியா திட்டம்

நாட்டில் ஆரோக்கியமற்ற உணவுகளின் சந்தைப்படுத்தலைக் கட்டுப்படுத்தவும், குழந்தைகளின் ஊட்டச்சத்தைப் பாதுகாக்கவும், கல்வி நிறுவனங்களில் ஆரோக்கியமான உணவுச் சூழலை உருவாக்கவும் புதிய ஊட்டச்சத்து சட்டத்தைக் கொண்டு வர சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளது.

இந்த சட்ட மசோதாவை அடுத்த ஆண்டிற்குள் தயாரித்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஸுல்கிஃப்லி அஹ்மாட் தெரிவித்துள்ளார்.

இந்தச் சட்டம் மூன்று முக்கிய அம்சங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கும். அவை, குழந்தைகள் மற்றும் கைக்குழந்தைகளின் ஊட்டச்சத்தைப் பாதுகாத்தல், ஆரோக்கியமற்ற உணவுகளின் சந்தைப்படுத்தலைக் கட்டுப்படுத்துதல், நிறுவனங்கள் மற்றும் கல்வி நிலையங்களில் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை ஊக்குவித்தல் ஆகியவையாகும்.

இதனிடையே, ஏற்கெனவே நடைமுறையில் உள்ள 1983-ஆம் ஆண்டு உணவுச் சட்டம் உணவுப் பாதுகாப்பு, தரம், கலவை மற்றும் லேபிள் தொடர்பான அம்சங்களைக் கவனிக்கும் நிலையில், புதிய சட்டம் ஊட்டச்சத்து விழிப்புணர்வு மற்றும் ஆரோக்கியமான உணவுக் கலாசாரத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்தும் என ஸுல்கிஃப்லி அஹ்மாட் விளக்கமளித்துள்ளார்.

குறிப்பாக, மலேசியாவில் குழந்தைகளிடையே உடல் பருமன் உள்ளிட்ட ஊட்டச்சத்துப் பிரச்சினைகள் அதிகரித்து வருவது இச்சட்டத்தைக் கொண்டு வருவதற்கான முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.

இச்சட்டத்திற்கான ஆரம்பகட்ட ஆலோசனைகள் கடந்த 2022 முதல் 2024-ஆம் ஆண்டு வரை நடத்தப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக சட்டத்தின் வரம்பு, தாக்க மதிப்பீடு மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகள் தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →