பகாங் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயியும், பினாங்கைச் சேர்ந்த வடிவமைப்பாளரும் ஸ்போர்ட்ஸ் டோட்டோ அதிர்ஷ்டக் குலுக்கலில் மொத்தம் 38 மில்லியன் ரிங்கிட்டைப் பரிசாக வென்று கோடீஸ்வரர்களாகியுள்ளனர்.
எஸ்டிஎம் லாட்டரி (STM Lottery) நிறுவனம் இன்று திங்கட்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் இந்த அதிர்ஷ்டசாலிகளின் விவரங்களைத் தெரிவித்தது.
43 வயதான பகாங் விவசாயி, கடந்த நவம்பர் 4ஆம் தேதி நடைபெற்ற பவர் டோட்டோ 6/55 குலுக்கலில் வெற்றி எண்களான 1, 16, 18, 23, 29, 46 ஆகியவற்றைப் பொருத்தி 22.16 மில்லியன் ரிங்கிட்டைப் பரிசாக வென்றார்.
கடந்த மூன்று ஆண்டுகளாகப் பரிசுத் தொகை 10 மில்லியன் ரிங்கிட்டைத் தாண்டும்போது மட்டுமே சீட்டுகளை வாங்கியதாகக் கூறிய அவர், பரிசுப் பணத்தின் ஒரு பகுதியைத் தனது விவசாயத் தொழிலை விரிவுபடுத்தவும், எஞ்சிய தொகையை குடும்பத்தின் எதிர்காலப் பாதுகாப்புக்காகவும் பயன்படுத்தப் போவதாகத் தெரிவித்தார்.
இதற்கிடையில், பினாங்கைச் சேர்ந்த 39 வயது வடிவமைப்பாளர் அக்டோபர் 24ஆம் தேதி நடைபெற்ற டோட்டோ சுப்ரீம் 6/58 குலுக்கலில் 15.89 மில்லியன் ரிங்கிட்டை வென்றுள்ளார். தனது வெற்றியை நம்ப முடியாமல் பரிசுச் சீட்டை பலமுறை சரிபார்த்ததாகக் கூறிய அவர், பின்னர் மனைவியுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டதாகத் தெரிவித்தார்.
பெரும் தொகையை வென்றாலும் வழக்கம்போல் வேலைக்குச் செல்லப் போவதாகக் கூறிய அவர், குடும்பத்துடன் விடுமுறைக்குச் செல்வதுடன், பரிசுத் தொகையின் ஒரு பகுதியை முதலீடு செய்யவும் திட்டமிட்டுள்ளார்.








