பேராக், லுமுட்டில், எஸ்பிலனேட் விங் நடைபாதைக்கு அருகே பிரமாண்ட கப்பல் ஒன்று கரையோரத் தடுப்புச் சுவரை மோதிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமூக ஊடகங்களில் காணொளி பரவியதைத் தொடர்ந்து இந்தச் சம்பவத்தை உறுதிப்படுத்திய மஞ்சோங் மாவட்ட போலீஸ் தலைவர் ஹஸ்புல்லா அப்துல் ரஹ்மான், விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பான காணொளியில், கப்பல் கரைக்கு மிக அருகில் நகர்ந்து வந்து மோதுவதும், இதனால் கரையோரத் தடுப்புச் சுவரின் ஒரு பகுதி உடைந்து சேதமடைந்திருப்பதும் பதிவாகியுள்ளது.
சம்பவத்துக்கு முன்னதாக அந்தப் பகுதியில் இருந்ததாகக் கூறும் சமூக ஊடகப் பயனர் ஒருவர், கப்பல் திடீரென வேகமாகச் சென்றதாகவும், நிற்காமல் வந்து கரையை மோதியதாகவும் தெரிவித்துள்ளார்.
மோதலின்போது பலத்த சத்தம் கேட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான காணொளிகளும் புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.








