செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் உருவாகும் புதிய சவால்களைக் கையாள்வதற்கு, ஆசியான் மற்றும் சீனா இடையே தொழில்நுட்ப ஒத்துழைப்பையும் ஒழுங்குமுறைப் பாதுகாப்பு வழிமுறைகளையும் வலுப்படுத்த வேண்டும் எனப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
மணிலாவில் இன்று நடைபெற்ற 29ஆவது ஆசியான்–சீனா உச்சநிலை மாநாட்டில் உரையாற்றிய அவர், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அதன் அபாயங்களைக் கட்டுப்படுத்த வலுவான நிர்வாகக் கட்டமைப்புகள் அவசியம் என்றார்.
மேலும், டிஜிட்டல் மாற்றம், புத்தாக்கம் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் துறைகளில் சீனாவுடன் இணைந்து செயல்படுவது முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், ஆசியான்–சீனா தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் 3.0இன் கீழ் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான ஒத்துழைப்பு, தொழில்துறை தரநிலைகள், போட்டித்தன்மை மற்றும் பயனீட்டாளர் பாதுகாப்பு ஆகியவற்றிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.
இந்தக் கூட்டாண்மை, வழக்கமான வர்த்தக உறவுகளுடன் நின்றுவிடாமல், தொழில்நுட்பப் பரிமாற்றம், தொழில்துறை மேம்பாடு மற்றும் பணியாளர் பயிற்சி ஆகியவற்றையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்றும் அன்வார் வலியுறுத்தினார்.








