சிரம்பான், ஜனவரி.08-
நீலாய், டேசா பால்மா அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் நிகழ்ந்த வெடிப்புச் சம்பவம் தொடர்பில், 62 வயதான முதியவருக்கு எதிராக 5 குற்றச்சாட்டுகள், நீதிமன்றத்தில் இன்று சுமத்தப்பட்டன.
அவற்றில், காயம் விளைவிக்கும் நோக்கத்துடன் வெடிப் பொருட்களைப் பதுக்கி வைத்திருந்ததாக மூன்று குற்றச்சாட்டுகளும் அடங்கும் என நீலாய் போலீஸ் தலைவர் ஜொஹாரி யாஹ்யா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இவ்வழக்கானது முக்கியத்துவம் வாய்ந்ததாக வகைப்படுத்தப்பட்டுள்ளதால், பொதுமக்களின் பாதுகாப்பிற்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கப்படுவதற்கான முயற்சிகள் அனைத்தும் மேற்கொள்ளப்படும் என்றும் ஜொஹாரி யாஹ்யா குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தன்னை விட்டுப் பிரிந்துச் சென்ற தனது முன்னாள் காதலி மீது கொண்ட விரோதம் காரணமாகவே, அந்தச் சந்தேக நபர், வெடிகுண்டுகளைத் தயாரித்தார் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கடந்த டிசம்பர் 27-ஆம் தேதி, நீலாயிலுள்ள பாத்தாங் பெனார் என்ற பகுதியில், அந்நபரை போலீஸார் கைது செய்த போது, அவரது முகம், உடல் மற்றும் கால்களில் தீக்காயங்களுடன் காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.








