ஜார்ஜ்டவுன், டிசம்பர்.22-
பினாங்கு மாநிலம் மீதான உரிமை கோரல் தொடர்பாக, கெடா மாநில அரசாங்கத்திடமிருந்து இதுவரை எந்தவொரு சட்டபூர்வமான நோட்டீஸோ அல்லது அதிகாரப்பூர்வ மனுவோ கிடைக்கவில்லை என்று பினாங்கு முதலமைச்சர் சோவ் கோன் யோவ் தெரிவித்துள்ளார்.
இன்று கொம்தாரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் சோவ் கோன் யோவ், கெடா அரசு இது தொடர்பாக எந்தவொரு கடிதத்தையோ அல்லது கோரிக்கையையோ இதுவரை பினாங்கு அரசுக்கு அனுப்பவில்லை என்பதை உறுதிப்படுத்தினார்.
கடந்த மாதம், கெடா மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ முகமது சனுசி முகமது நோர், பினாங்குடனான கெடாவின் உறவு குறித்து நீதிமன்ற நடவடிக்கை எடுக்க சட்டக் குழுவை நியமிக்க உள்ளதாகத் தெரிவித்திருந்தார்.
ஏற்கனவே இது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த சோவ் கோன் யோவ், கெடா அரசு, சட்ட ரீதியாகச் செயல்பட விரும்பினால் அவர்களை "நீதிமன்றத்தில் சந்திப்போம்" என்று சவால் விடுத்திருந்தார்.
மலேசிய கூட்டரசு அரசியலமைப்பின் கீழ் பினாங்கு ஓர் இறையாண்மைக் கொண்ட மாநிலம் என்றும், கெடாவுடனான வரலாற்று ரீதியான நிதி ஒப்பந்தங்கள் கூட்டரசு அரசாங்கத்தைச் சார்ந்தவை என்றும் சோவ் கோன் யோவ் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
கெடா அரசு ஒருவேளை சட்டபூர்வ நோட்டீஸ் அனுப்பினால், அது குறித்து மாநில சட்ட ஆலோசகரிடம் ஆலோசனை பெற்று அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.








