Oct 1, 2026
Thisaigal NewsYouTube

சொஸ்மா சட்டத்தில் திருத்தங்கள்: வெளிப்படையான விவாதங்கள் தேவை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சொஸ்மா சட்டத்தில் திருத்தங்கள்: வெளிப்படையான விவாதங்கள் தேவை

கோலாலம்பூர், டிசம்பர்.10-

2012 ஆம் ஆண்டு சிறப்பு நடவடிக்கைகளுக்கான பாதுகாப்புச் சட்டமான சொஸ்மாவில் திருத்தங்கள் கொண்டு வருவது தொடர்பில் வெளிப்படையான விவாதங்கள் தேவை என்று மக்களவை சபாநாயகர் டான் ஶ்ரீ ஜொஹாரி அப்துல் முன்மொழிந்தார்.

சொஸ்மாவின் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்து வெளிப்படையாக விவாதிக்கப்படுவது மூலம் அந்த சட்டத்தின் தேவைகளை அரசாங்கம் தீர்மானிக்க முடியும் என்று சபாநாயகர் குறிப்பிட்டார்.

சொஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் நபர்களை நீதிமன்ற விசாரணையின்றி தடுத்து வைப்பது, ஜாமீன் அனுமதிக்கப்படாதது உட்பட அந்த பாதுகாப்புச் சட்டத்தில் பல்வேறு பலவீனங்கள் இருப்பதாக பரவலாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

மக்களவையில் அண்மையில் நடைபெற்ற சொஸ்மா சட்டம் மீதான விவாதங்கள் மற்றும் நாடாளுமன்ற சிறப்புத் தேர்வுக் குழு முன்மொழிந்த பரிந்துரைகளைத் தொடர்ந்து அந்தச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் வெளிப்படையான விவாதங்களுக்கு டான் ஶ்ரீ ஜொஹாரி அப்துல் அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று புதன்கிழமை மலேசிய வழக்கறிஞர்களுடன் நடத்திய கலந்துரையாடல் அமர்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில் டான் ஶ்ரீ ஜொஹாரி அப்துல் இதனைத் தெரிவித்தார்.

சமூகத்தில் பல்வேறு பிரிவுகளிடமிருந்து வெளிப்படையான கலந்துரையாடல் நடத்துவது மூலம் சொஸ்மா சட்டம் குறித்து அரசாங்கம் சிறந்த முடிவுகளை எடுக்க முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

அதே வேளையில் சொஸ்மா சட்டத்தில் தேவையான திருத்தங்களைக் கொண்டு வந்து, அந்தச் சட்டத்தை ஆக்ககரமான முறையில் பயன்படுத்த அனுமதிப்பதா? அல்லது கொடுங்கோல் சட்டம் என்று சில தரப்பினரால் வர்ணிக்கப்படும் அந்தச் சட்டத்தை அகற்றுவதா? என்பது குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினரின் முடிவைப் பொறுத்ததாகும் என்று டான் ஶ்ரீ ஜொஹாரி அப்துல் விளக்கினார்.

மலேசியத் தாய்மார்களுக்கு வெளிநாடுகளில் பிறக்கும் குழந்தைகளுக்குக் குடியுரிமை தொடர்பான நீண்ட காலப் பிரச்னைக்கு பொது விவாதம் நடத்தப்பட்டது மூலம் நடப்பு சட்டத்தில் திருத்தங்கள் செய்வதற்கு வழிவகுக்கப்பட்டதை டான் ஶ்ரீ ஜொஹாரி அப்துல் உதாரணம் காட்டினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →