ஷா ஆலாம், செப்டம்பர்.22-
மலேசியத் தமிழர் சிந்தனைப் பேரவையின் ஏற்பாட்டில் தந்தை பெரியாரின் 147 ஆவது பிறந்த நாள் விழா, கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி திங்கட்கிழமை வெகுச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
ஷா ஆலாம், செக்ஷன் 19 இல் உள்ள பொது மண்டபத்தில் மலேசியத் தமிழர் சிந்தனைப் பேரவையின் தலைவரும், எழுத்தாண்மை ஏந்தலுமான பெரு.அ. தமிழ்மணி தலைமையில் நடைபெற்ற தந்தை பெரியாரின் 147 ஆவது அகவை நன்விழாவில், முன்னாள் துணை அமைச்சர் டான் செஇ க. குமரன் சிறப்பு பிரமுகராகக் கலந்து சிறப்பித்தார்.
இயக்கத்தின் பொதுச் செயலாளர் சி.மு. விந்தைக்குமரனின் வரவேற்புரையுடன் தொடங்கிய இந்நிகழ்வில் இயக்கத் தலைவர் பெரு. அ. தமிழ்மணியும், டான் ஶ்ரீ குமரனும் இணைந்து பெரியாரின் உருவப்படத்தைத் திறந்து வைத்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்வில் சிறப்புரையாற்றிய டான் ஶ்ரீ குமரன், நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்ட மலேசிய இந்தியர்கள், 200 ஆண்டுகள் ஆகியும் இன்னமும் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாகி வரும் ஒரு சமூகமாக விளங்கி வருவது குறித்து தமது கவலையை வெளிப்படுத்தினார்.
இந்நிலை மாற வேண்டும். தன்மானமிக்கவர்களாக இந்தியர்கள் தலைநிமிர வேண்டும். அடுத்த தலைமுறையினருக்கு ஓர் எடுத்துக்காட்டாக வாழ வேண்டும் என்று டான் ஶ்ரீ குமரன் தமது உரையில் குறிப்பிட்டார்.
இயக்கத் தலைவர் பெரு. அ. தமிழ்மணி தமது பேருரையில் இந்தியர்கள் இந்த நாட்டிற்கு எப்படி வந்தார்களோ, அப்படியேதான் இன்னமும் உள்ளனர் என்று தமது வேதனையை வெளிப்படுத்தினார்.
தந்தை பெரியார் பிறந்த தின விழாவிற்கு முத்தாய்ப்பு வைக்கும் நிகழ்வாக பெரியாரின் பெருந்தொண்டர்களான கொள்கைக் கனல் கெ. வாசு மற்றும் த. பரமசிவம் ஆகியோரின் நீண்ட கால சேவையைப் பாராட்டி, தன்மானப் பெருஞ்சுடர் எனும் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. அவ்விருவருக்கும் டான் ஶ்ரீ குமரன் மாலை, பொன்னாடை போர்த்தி, பாராட்டுப் பத்திரம் வழங்கி சிறப்பு செய்தார்.
இந்நிகழ்வில் மலேசிய திராவிடர் கழகத்தின் தேசியத் தலைவர் சா. பாரதி, மலேசிய மாந்த நேய திராவிடர் கழகத்தின் பிரதிநிதி அன்பு இதயன் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.








