சிரம்பான், ஜனவரி.19-
சிரம்பான் ஜெயா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் அளித்த காற்று மாசுபாடு புகாரைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி 13 ஆம் தேதி நெகிரி செம்பிலான் சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் சுங்கை காடுட் (Sungai Gadut) பகுதியில் உள்ள ஒரு வளாகத்தில் அதிரடி சோதனை நடத்தியதாக நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் எஸ். வீரப்பன் தெரிவித்தார்.
இந்தச் சோதனையில், குடியிருப்புப் பகுதிக்கு மிக அருகில், சுமார் 30 மீட்டர் தொலைவிலேயே இந்த ஆலை இயங்கி வந்தது கண்டறியப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
அதிகாரிகளின் ஆய்வில், அந்த வளாகம் ஒரு தொழில்பேட்டை பகுதியில் அமையாமல் கிராமப்புற பகுதியில் இருப்பதும், அங்கு நிலக்கரியைப் பயன்படுத்தி இரும்பு உருக்கும் தொழில் நடைபெற்று வருவதும் உறுதிச் செய்யப்பட்டது. மேலும், அந்த ஆலையில் புகையைக் கட்டுப்படுத்தும் எந்தவொரு காற்றுச் சுத்திகரிப்பு கருவிகளும் இல்லை என்பதும், சுற்றுச்சூழல் துறையின் முறையான அனுமதி இன்றி கடந்த 30 ஆண்டுகளாக இந்த ஆலை இயங்கி வந்ததும் தெரிய வந்துள்ளது என்று வீரப்பன் குறிப்பிட்டார்.
இது குறித்து தனது அறிக்கையில் மேலும் தெரிவித்த வீரப்பன், மக்களின் புகாரில் உண்மை இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த ஆலை தொழில்பேட்டைக்கு வெளியே அமைந்திருப்பதால், மேல் நடவடிக்கைக்காக சிரம்பான் மாநகர் மன்றத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
சுற்றுச்சூழல் மாசினை ஏற்படுத்தும் நபர்களுக்கு எதிராக 1974-ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தரச் சட்டத்தின் கீழ் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.








