டீசல் எண்ணெய் டேங்கர் லாரி ஓட்டுநரான தனது தம்பி தர்மசீலன் லெட்சுமணன், கல்குவாரியில் மரணம் அடைந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவரது சகோதரி சரஸ்வதி போலீசில் புகார் செய்துள்ளார்.
கடந்த நவம்பர் 20-ஆம் தேதி, 28 வயதான தர்மசீலன், உலு லங்காட், செராஸ், சுங்கை தெக்காலி சாலையில் உள்ள கல்குவாரிக்கு டீசல் விநியோகிக்கச் சென்றபோது, மேடான பாதையில் லாரி நின்றுள்ளது. அப்போது, அங்கீகரிக்கப்பட்ட இழுவை வாகனத்தைப் பயன்படுத்தாமல், கல்குவாரியின் கனரக இயந்திரம் மூலம் இரும்புக் கம்பியைக் கட்டி லாரியை இழுத்தபோது, கம்பி அறுந்து தாக்கியதில் தர்மசீலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

எனினும் இந்த சம்பவம் எப்படி நிகழ்ந்தது, உடலில் எந்தெந்த இடத்தில் காயம் ஏற்பட்டு, மரணம் சம்பவித்து இருக்கிறது என்று எதுவுமே தங்களுக்கு முறையாக தெரிவிக்கப்படவில்லை என்று சிரம்பான், தாமான் சிரம்பான் ஜெயாவை சேர்ந்த 36 வயது சரஸ்வதி, கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் நிலையத்தில் இன்று புகார் அளித்துள்ளார்.
போலீஸ் புகாருக்குப் பிறகு, தேசிய விசுவாச முழக்க செயலகத்தின் தலைவர் டத்தோ கலைவாணர் தலைமையில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய சரஸ்வதி, அம்பாங் மருத்துவமனையின் சவக் கிடங்கில் தர்மசீலனின் முகத்தை மட்டுமே பார்க்க அனுமதித்த விசாரணை அதிகாரிகள், உடலில் ஏற்பட்ட காயங்களைப் பார்க்கவோ, விபத்து நடந்த விதத்தை விளக்கவோ மறுத்துவிட்டதாக குற்றம் சாட்டினார்.

அதேவேளையில் தனது மகனின் மரணம் தொடர்பில் தங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று தர்மசீலனின் தாயார் லெட்சுமி, கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், விபத்து நடந்த இடத்தில் தடயவியல் சோதனைகள் நடத்தப்படவில்லை என்றும், விபத்துக்குள்ளான லாரி மற்றும் கனரக இயந்திரம் இதுவரை பறிமுதல் செய்யப்படவில்லை என்றும் தர்மசீலனின் உறவுக்காரரான ராமச்சந்திரன் வேலாயுதம் தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்து கல்குவாரி நிர்வாகமோ, தர்மசீலன் பணியாற்றிய நிறுவனமோ குடும்பத்தினருக்கு எந்த விளக்கமும் அளிக்கவில்லை எனவும் அவர் சுட்டிக் காட்டினார்.
மேலும் சவக் கிடங்கில் தமது சகோதரன் தர்மசீலனின் தலையை மட்டுமே பார்க்க முடியும் என்றும் உடலை பார்க்க முடியாது என்று அதிகாரிகள் கூறியதாகக் குறிப்பிட்டார்.
தர்மசீலன் மரணம் தொடர்பில் காஜாங் மாவட்ட போலீஸ் தலைமையகம் நேர்மையாக விசாரணை செய்து, குற்றவியல் சட்டம் பிரிவு 304 A-ன் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன், சிலாங்கூர் மாநில தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறையான DOSH- சும் இவ்விவகாரத்தில் தலையிட்டு உரிய விசாரணை நடத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.








