பேராக் மாநில வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு 1.693 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அ.சிவநேசன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டைக் காட்டிலும் சுமார் 120 மில்லியன் ரிங்கிட் அதிகரித்துள்ள இந்தப் பட்ஜெட், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியையும் வலுவான நிதி நிர்வாகத்தையும் வெளிப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த 2009ஆம் ஆண்டில் சுமார் 800 மில்லியன் ரிங்கிட்டாக இருந்த மாநிலப் பட்ஜெட், கடந்த 18 ஆண்டுகளில் இரு மடங்குக்கும் அதிகமாக வளர்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.
கோவிட்-19 பெருந்தொற்று உள்ளிட்ட பல்வேறு பொருளாதாரச் சவால்களைக் கடந்து, தற்போதைய சர்வதேச அரசியல் பதற்றங்கள் மற்றும் எண்ணெய் விலை உயர்வுக்கு மத்தியிலும் பேராக் மாநிலம் உபரி பட்ஜெட்டைத் தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்க சாதனை என்றும் டத்தோ சிவநேசன் பெருமிதம் தெரிவித்தார்.
மேலும், 2027ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் ஐந்து முக்கிய அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி, மக்களின் நல்வாழ்வு மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும் டத்தோ சிவநேசன் சுட்டிக் காட்டினார்.








