குவாந்தான், ஆகஸ்ட்.02-
சபா, பாபாரில் 13 வயது மாணவி ஸாரா கைரீனா மஹாதீர் மரணமடைந்தது தொடர்பான விசாரணையைப் போலீசார் முழுமைப்படுத்தி விட்டதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்திருக்கிறார். அவ்விசாரணை அறிக்கை அடுத்த வாரம் தேசிய சட்டத்துறை அலுவலகத்திடம் சமர்ப்பிக்கப்படும். அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுப்பது அதன் முடிவைப் பொருத்தது என அமைச்சர் கூறினார்.
அம்மாணவியின் மரணத்தில் பகடி வதை அம்சம் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. விசாரணைக்கு உதவ சுமார் 60 சாட்சியாளிகளிடம் இருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சமய இடைநிலைப் பள்ளியொன்றில் முதலாம் படிவத்தில் பயின்று வந்த ஸாரா, கடந்த ஜூலை 16 ஆம் தேதி மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து பள்ளியின் தங்கும் விடுதிக்கு அருகே இருந்த கால்வாயில் சுய நினைவு இல்லாத நிலையில் கண்டெடுக்கப்பட்டார். மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்ட அவர் சிகிச்சை பயனளிக்காமல் மரணமடைந்தது உறுதிப்படுத்தப்பட்டது.








