அம்பாங் ஜெயா, பிப்ரவரி.08-
இனம் எவ்வாறாக இருந்தாலும், நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் சட்டங்களுக்குப் புறம்பாகக் கட்டப்படும் எந்தவொரு வழிபாட்டுத் தலத்தையும் அரசாங்கம் அங்கீகரிக்காது.
நாட்டின் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தைப் பேணுவதற்காக, கோவில்கள், பள்ளிவாசல்கள், சுராவ் மற்றும் தேவாலயங்கள் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டுத் தலங்களும் ஒரே மாதிரியான விதிகளையே பின்பற்ற வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் தெரிவித்தார்.
"நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளைப் பின்பற்றாமல் வழிபாட்டுத் தலங்கள் பெருகுவதை நான் ஆதரிக்கவில்லை என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன்," என்று அவர் கூறினார்.
"பள்ளிவாசல்கள் , சுராவ் அல்லது தேவாலயங்களுக்கு என்னென்ன விதிகள் உள்ளனவோ, அவையே இதற்கும் பொருந்தும். ஆனால், இதன் காரணமாகப் பகைமை ஏற்படக்கூடாது. அதே நேரத்தில் சட்டத்தையும் மீறக்கூடாது. நாம் சட்டத்தை மீறினால், அதன் விளைவு வெறுப்பாகத்தான் இருக்கும்; அது பிரச்சினைகளைத் தீர்க்காது, என்று சிலாங்கூர் பி.கே.ஆர் மாநாட்டில் உரையாற்றியபோது அக்கட்சியின் தலைவருமான டத்தோ ஶ்ரீ அன்வார் இதனை வலியுறுத்தினார்.
மேலும், நாட்டின் ஒருமைப்பாட்டைச் சீர்குலைக்கும் வகையில் இத்தகைய உணர்ச்சிகரமான விவகாரங்களில் 'ஹீரோ'வாகக் காட்டிக் கொள்ள முயற்சிப்பவர்களுக்கும் அன்வார் எச்சரிக்கை விடுத்தார்.








