ஒரு கோடிக்கும் அதிகமான மக்களுக்கு வழங்குவதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ள தலா 100 வெள்ளி ஈ- வாலட் ரொக்கத் தொகை, விரைவில் அவர்களின் கணக்கில் சேர்க்கப்படும் என்று துணை நிதி அமைச்சர் டத்தோஸ்ரீ அமாட் மஸ்லான் தெரிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள பி40 மற்றும் எம்40 குடும்பங்களின் பெரியவர்களுக்கு வழங்குவதற்கு அறிவிக்கப்பட்ட இந்த 100 வெள்ளி ஈ- வாலட் ரொக்கத் தொகையை சம்பந்தப்பட்டவர்களின் கணக்கில் சேர்ப்பதற்கான நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த உதவித் தொகை வழங்குவது தொடர்பான விவரங்கள் அவ்வப்போது அறிவிக்கப்படும். ஆண்டுக்கு ஒரு லட்சம் வெள்ளி அல்லது அதற்கும் குறைவாக வருமானம் பெறுகின்ற பி40 மற்றும் எம்40 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு கோடிக்கு அதிகமானவர்களுக்கு இந்த உதவித் தொகையை வழங்குவதற்கான கடப்பாட்டை அரசாங்கம் கொண்டு இருப்பதாக அமாட் மஸ்லான் குறிப்பிட்டார்.








