கோலாலம்பூர், ஆகஸ்ட்.13-
கடந்த 2020 ஆம் ஆண்டிலிருந்து இவ்வாண்டு ஜுன் மாதம் வரை அரசாங்க ஊழியர்களில் நான்கு ஆயிரத்து 194 பேர், திவாலானவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர் என்று திவால் இலாகாவின் புள்ளி விபரங்கள் காட்டுகின்றன என்று துணை நிதி அமைச்சர் லிம் ஹுய் யிங் தெரிவித்தார்.
நாடு முழுவதும் உள்ள 16 லட்சம் அரசு ஊழியர்களில் இந்த எண்ணிக்கை 0.3 விழுக்காடாகும் என்று லிம் ஹுய் யிங் இன்று நாடாளுமன்றத்தில் விளக்கினார்.
அதே வேளையில் நிதி நெருக்கடியினால் திவால் நிலைக்கு ஆளானவர்கள், அதிலிருந்து மீள்வதற்கு உதவும் வகையில் அவர்களுக்கு நிதி தொடர்புடைய ஆலோசனைகள் மற்றும் பெறப்பட்ட கடனை மறுசீரமைத்து, மீண்டும் செலுத்துதற்குரிய அதன் கட்டமைப்பு முறை மாற்றி அமைக்கப்படுவது போன்ற உதவிகள் ஏகேபிகே எனப்படும் கடன் நிர்வாக ஆலோசனை ஏஜென்சி மூலமாக அரசாங்கம் வழங்கி வருவதாக லிம் ஹுய் யிங் குறிப்பிட்டார்.








