கோலாலம்பூர், டிசம்பர்.12-
மஸ்ஜிட் ஜாமெக் பகுதியில் நேற்று இரவு கோலாலம்பூர் குடிநுழைவு அதிகாரிகள் நடத்திய அதிரடிச் சோதனையில், நாட்டில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 31 பேர் கைது செய்யப்பட்டனர்.
நேற்று இரவு 7.20 மணியளவில், சுமார் 25 அதிகாரிகளுடன், ‘ஓப் குத்திப்’ என்ற அமலாக்க நடவடிக்கையானது மஸ்ஜிட் ஜாமெக்கின் குறிப்பிட்ட சில பகுதிகளில் நடத்தப்பட்டதாக அதன் இயக்குநர் வான் முகமட் ஸைனி வான் யுசோஃப் தெரிவித்தார்.
எல்ஆர்டி நிலையங்கள், தெருமுனைகள் உள்ளிட்ட பகுதிகளில், சந்தேகத்திற்கிடமாகச் சுற்றித் திரிந்த 60-க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்களிடம் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர்களில் 31 பேரிடம் முறையான ஆவணங்கள் இல்லாததால், குடிநுழைவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், வங்காளதேசம், இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அவர்கள் அனைவரும், புக்கிட் ஜாலில் குடிநுழைவு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் வான் யுசோஃப் தெரிவித்துள்ளார்.








