ஜோகூர் பாரு, ஜூலை.18-
ஜோகூர் பாரு, தாமான் உங்கு துன் அமீனாவில் உள்ள மலிவு விலை அடுக்குமாடி வீட்டில் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இரட்டைக் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஓர் இந்திய நபர், மரணத் தண்டனையிலிருந்து உயிர் தப்பினார்.
39 வயது எம். ஜெய்குமார் என்ற அந்த நபரை ஜோகூர் பேரு, உயர் நீதிமன்றம் இன்று விடுதலை செய்தது.
51 வயது பி.கே கமலா மற்றும் அவருடன் ஒன்றாகத் தங்கியிருந்த அவரின் ஆண் நண்பரான 59 வயது எஸ். செல்வராஜா ஆகியோரை, மிகக் கொடூரமாக வெட்டிக் கொலை செய்ததாக இரண்டு பிள்ளைகளுக்குத் தந்தையான ஜெய்குமார் குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தார்.
ஜெய்குமார் மீது சுமத்தப்பட்ட இந்த இரட்டைக் கொலைக் குற்றச்சாட்டில் அடிப்படை முகாந்திங்கள் இல்லை என்பதால், அவரை எதிர்வாதம் செய்ய அழைக்காமலேயே வழக்கிலிருந்து விடுதலை செய்வதாக உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ அபு பாக்கார் காதார் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் வேலை செய்து வந்தவரான ஜெய்குமாரை இந்த இரட்டைக் கொலைகளுடன் தொடர்புப்படுத்தக்கூடிய எந்த ஆதாரங்களும் இல்லை என்று நீதிபதி டத்தோ அபு பாக்கார் குறிப்பிட்டார்.
இருவரையும் ஜெய்குமார்தான் கொலை செய்தார் என்பதற்கு பிராசிகியூஷன் தரப்பு, சூழ்நிலை ஆதாரங்களைத்தான் நம்பி உள்ளதே தவிர இக்கொலைகளுடன் தொடர்புப்படுத்தக்கூடிய எந்தவோர் ஆதாரமும் முன் வைக்கப்படவில்லை.
அடகுக் கடையில் ஜெய்குமார் விற்ற நகைகள் கொலையுண்ட பி.கே கமலாவுக்குச் சொந்தமானவையா? என்பதை அரசு தரப்பு உறுதிப்படுத்தத் தவறியிருப்பது சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இறந்தவரின் உடலில் மேலும் சில நகைகள் இருந்துள்ளன. நகைகளைத் திருடியதாகக் கூறப்படும் ஜெய்குமார், பி.கே கமலாவின் உடலில் எஞ்சிய நகைகளையும் ஏன் விட்டுச் சென்றுள்ளார் என்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று நீதிபதி டத்தோ அபு பாக்கார் தமது தீர்ப்பில் சுட்டிக் காட்டினார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி துப்பரவுப் பணியாளரான பி.கே கமலாவையும், அவருடன் ஒன்றாகத் தங்கியிருந்த நபரான செல்வராஜாவையும் வெட்டிக் கொலைச் செய்ததாக ஜெய்குமார் குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தார்.








