கோலாலம்பூர், ஆகஸ்ட்.15-
தேசியக் கொடியைத் தவறுதலாகக் கட்டி விட்டார் என்பதற்காக ஒரு சிறு வணிகரைத் தாக்குவதற்கு எதிர்க்கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து, ஒரு படையே திரண்டு சென்று அவரின் கடை முன் திரண்டு இருக்கும் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மால் சாலேவின் செயல், வெட்கக்கேடானதாகும் என்று ஜசெக இளைஞர் பிரிவுத் தலைவர் வூ கா லியோங் வர்ணித்துள்ளார்.
ஒற்றுமை அரசாங்கத்தில் இருந்து கொண்டு பெரிக்காத்தான் நேஷனல், பெர்சத்து, பாஸ் கட்சியுடன் ஒன்றாகக் கைக்கோர்த்து, சிறு வணிகருக்கு எதிராகப் பகடிவதைச் செயலில் அக்மால் ஈடுபட்டு இருப்பது, அவர்களின் இரட்டை நிலைப்பாட்டையே காட்டுகிறது என்று வூ கா லியோங் குறிப்பிட்டார்.
ஒரு சிறு வணிகரைத் தாக்குவதற்கு மும்முரம் காட்டும் ஒரு விளம்பரப் பிரியரான அக்மால், எதிர்கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து கொண்டு ஜசெக.வையும், பக்காத்தான் ஹராப்பானையும் தாக்கியுள்ளார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பெர்சத்து மற்றும் பாஸ் கட்சி இளைஞர் பிரிவுத் தலைவர்களுடன் அக்மால் கட்டிப் பிடித்து புளங்காகிதம் அடைந்துள்ளார். ஆனால், அம்னோ தலைவர்களைப் பெரும்பாலான இடங்களில் தோற்கடித்து, தலைத்தெறிக்க ஓடச் செய்தது பெர்சத்துவும், பாஸ் கட்சியுமே என்பதை அக்மால் மறந்து விட்டார் போலும் என்று பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான வூ கா லியோங் குறிப்பிட்டார்.
சுயநலத்திற்காக எதிரிகளுடன் கட்டிப் பிடிப்பதுதான் உண்மையான இளைஞர் தலைவர்களா? என்றும் வூ கா லியோங் கேள்வி எழுப்பினார்.
இளைஞர் பிரிவின் வீரமும், வேகமும், போராட்டமும் என்பது ஒரு சிறு வணிகரைப் பகடிவதைச் செய்வதில் இல்லை. ஆனால், அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் அக்மாலின் இத்தகையச் செயல்பாடு, மக்களின் வீடுகளில் கடன்களை வசூலிக்கும் ஆலோங் போன்ற குண்டர்களின் செயல்களை நியாயப்படுத்துவது போல் உள்ளது என்று வூ கா லியோங் குறிப்பிட்டார்.
இது போன்ற ஜந்துகள், ஒற்றுமை அரசாங்கத்தில் இருப்பது மிக வெட்கக்கேடானதாகும் என்று அக்மாலை நோக்கி வூ கா லியோங் தனது முகநூலில் வறுத்து எடுத்துள்ளார்.








