சென்னை விமான நிலையத்தில் 3.45 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவைக் கடத்த முயன்றதாக 62 வயதுடைய மலேசியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோலாலம்பூரிலிருந்து சென்னை அண்ணா அனைத்துலக விமான நிலையத்திற்கு வந்த அவர், சுங்கத்துறையிடம் எந்தப் பொருளையும் அறிவிக்காமல் கிரீன் சேனல் வழியாக வெளியேற முயன்றுள்ளார்.
பயணிகளின் நடமாட்டத்தை கண்காணித்துக் கொண்டிருந்த சுங்கத்துறையின் விமான நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகளுக்கு அவரது நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவரது பயணப் பெட்டி சோதனையிடப்பட்டது.
அப்போது, பயணப் பெட்டியின் அடிப்பகுதியில் ரகசியமாக அமைக்கப்பட்டிருந்த பகுதியில் நான்கு பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் 3,452 கிராம் எடையுள்ள ஹைட்ரோபோனிக் கஞ்சா இருந்தது சோதனையில் உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், இந்தியாவின் போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் பேரா மாநிலத்தைச் சேர்ந்த அந்த மலேசியர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அனைத்துலக போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் அவருக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.








