ஒரு மாதம் முழுவதும் நடைபெறும் பாரம்பரிய விழா, முன்னோர்களையும் அலைந்து திரியும் ஆவிகளையும் நினைவுகூரும் சடங்குகள்... இப்போது பினாங்கு மாநிலத்தின் அதிகாரப்பூர்வ பாரம்பரியமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது!
ஹங்கரி கோஸ்ட் விழா எனப் பரவலாக அறியப்படும் தியோங் குவான் போர் தோர் விழாவை, பினாங்கு அரசு அருவப் பண்பாட்டு பாரம்பரியமாக அங்கீகரித்துள்ளது.
ஹங்கரி கோஸ்ட் என்றால் பொதுவாக “பசி பேய்” எனப் பொருள்படும். சீன சந்திர நாட்காட்டியின் ஏழாவது மாதத்தில் நடைபெறும் இந்த விழா, 15ஆம் நாளில் உச்சத்தை அடைகிறது.
இதன் மூலம், ஹங்கரி கோஸ்ட் விழாவுக்கு இத்தகைய அதிகாரப்பூர்வ அங்கீகாரம் வழங்கிய மலேசியாவின் முதல் மாநிலம் என்ற பெருமையை பினாங்கு பெற்றுள்ளது என்று மாநில முதலமைச்சர் சௌ கான் இயோ தெரிவித்தார்.
தாவோ மற்றும் புத்த சமயத்தைப் பின்பற்றும் சீன சமூகத்தினரால் நீண்ட காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் இந்த விழா, முன்னோர்களுக்கு மரியாதை செலுத்தும் முக்கிய கலாசார மரபாக விளங்குகிறது.
இதனுடன், க்வாங்டுங் & தெங்சௌ எ எண் 1 கல்லறை உள்ளிட்ட ஆறு வரலாற்றுத் தளங்களையும் மாநிலப் பாரம்பரியத் தளங்களாக அங்கீகரிக்க பினாங்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த விழாவும் ஆறு பாரம்பரியத் தளங்களும் அக்டோபர் 10ஆம் தேதி நடைபெறும் அதிகாரப்பூர்வ விழாவில் அறிவிக்கப்படவுள்ளன என்று சௌ கான் இயோ குறிப்பிட்டார்.








