நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்குப் பின்னர், காணாமல் போன 55 மலேசியர்களைத் தேடும் பணியில், அவர்களின் குடும்பங்கள் கண்ணீருடன் அடுத்த கட்டத்திற்கு தயாராகி வருகின்றன.
நேற்று வரை, காணாமல் போனவர்களின் குடும்பங்களில் 25 குடும்பங்கள் டி.என்.ஏ மாதிரிகளை வழங்கியுள்ளன. தங்களது அன்புக்குரியவர்கள் உயிருடன் திரும்புவார்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கும் குடும்பங்களுக்கு, இந்த டி.என்.ஏ மாதிரி வழங்கும் நடவடிக்கை மிகுந்த வேதனையான கட்டமாக அமைந்துள்ளது.
சொலிடாரிட்டி மலேசியா: ஃபேமிலி டாலம் ஹராப்பான் என்ற அமைப்பின் பிரதிநிதி டாக்டர் ஆர். மணிவண்ணனும் தனது குடும்பத்தினருடன் டி.என்.ஏ மாதிரியை வழங்கியுள்ளார்
நேபாளத்திற்குச் சென்ற அவரது சகோதரி 48 வயதான கோமதி ரெத்தினம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
செராஸ் பகுதியில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்ற போலீஸ் துறையினர் , பெற்றோர், குழந்தைகள் மற்றும் சகோதரர்கள் உள்ளிட்ட ஐந்து குடும்ப உறுப்பினர்களிடமிருந்து டி.என்.ஏ மாதிரிகளைப் பெற்றுள்ளனர்.
இதனிடையே, காணாமல் போனவர்களின் பல் துலக்கும் பிரஸ், சீப்பு, உள்ளிட்ட தனிப்பட்ட பொருட்களையும் குடும்பத்தினர் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
ஆடைகள், காலணிகள், கைப்பேசி மற்றும் உடலில் உள்ள அடையாளங்கள் குறித்த தகவல்களும் சேகரிக்கப்படுகின்றன. அடையாளம் தெரியாத உடல்கள் கண்டெடுக்கப்பட்டால், அவற்றை அடையாளம் காண இந்தத் தகவல்கள் உதவும்.
இந்நிலையில், மலேசிய வெளியுறவு அமைச்சு காத்மாண்டுவுக்கு அதிகாரப்பூர்வ குழுவை அனுப்பி, மீட்பு மற்றும் அடையாளம் காணும் பணிகளில் நேரடியாக உதவவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிருடன் இருப்பார்கள் என்ற நம்பிக்கை ஒருபுறம்… அடையாளம் தெரியாத உடல்களில் தங்கள் உறவினர்களைத் தேடும் அச்சம் மறுபுறம்… 55 மலேசியக் குடும்பங்களின் காத்திருப்பு இன்னும் தொடர்கிறது.








