ஜோகூர் பாருவில் உள்ள ஒரு வணிக வளாகத்தின் அடித்தள வாகன நிறுத்துமிடத்தில் கார் ஒன்று தீப்பிடித்ததில், சிங்கப்பூர் பெண் உட்பட மூன்று பெண்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கு இன்று பிற்பகல் 3.40 மணியளவில் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, 26 வீரர்கள் 3 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 2 அவசர மருத்துவ உதவி வாகனங்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
சம்பவ இடத்துக்கு 6 நிமிடங்களில் சென்றடைந்த வீரர்கள், அடித்தள வாகன நிறுத்துமிடத்தை அடர்த்தியான புகை சூழ்ந்திருந்ததால் முழுமையான ஆய்வை மேற்கொண்டனர். மூன்று பெண்கள் மூச்சுத் திணறலுக்கு உள்ளான நிலையில் முதலுதவி வழங்கப்பட்டது.
அவர்களில் ஒருவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பாதிக்கப்பட்டவர்களில் 25 மற்றும் 48 வயதுடைய இருவர் உள்ளூர் பெண்கள் என்றும், சிங்கப்பூர் பெண்ணின் தனிப்பட்ட விவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. தீ ஏற்பட்டதற்கான காரணம் விசாரணையில் உள்ளது.








