கோலாலம்பூர், ஜாலான் ஜெலாத்தேக் சாலையில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்த விபத்து தொடர்பில், 32 வயது லிபியப் பல்கலைக்கழக மாணவர் இன்று கோலாலம்பூர், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.
அலி அப்துல் ரஹ்மான் மஹ்மூட் எல்மாக்கி என்ற அந்த மாணவர், கடந்த நவம்பர் 21ஆம் தேதி அதிகாலை 1 மணியளவில், தாமான் கெராமாட் நோக்கிச் செல்லும் ஜாலான் ஜெலாத்தேக் சாலையில் புரோட்டோன் சாகா காரை ஆபத்தான முறையில் செலுத்தி, 43 வயது ஹைரெஸாம் ஓமார் மரணத்திற்குக் காரணமாக இருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
குற்றச்சாட்டை அவர் மறுத்து விசாரணை கோரியுள்ளார். குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஐந்து முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், அதிகபட்சம் 50 ஆயிரம் ரிங்கிட் அபராதமும் விதிக்கப்படலாம்.
இதற்கிடையில், குற்றத்தின் தீவிரத்தையும், அவர் வெளிநாட்டவர் என்பதையும் சுட்டிக் காட்டி, அரசுத் தரப்பு பிணை வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது. இருப்பினும், நீதிமன்றத்தின் விருப்பத்திற்கு விடுவதாகக் கூறிய அரசுத் தரப்பு, 70 ஆயிரம் ரிங்கிட் பிணை கோரியிருந்தது.
தற்காப்புத் தரப்பு, தமது கட்சிக்காரர் மலேசியாவில் மனைவியுடன் நிரந்தர முகவரியில் வசிப்பதாகவும், அடுத்த மாதம் முதுகலைப் பட்டப்படிப்புக்கான தேர்வுகளை எதிர்கொள்ளவிருப்பதாகவும் தெரிவித்து, பிணைத் தொகையைக் குறைக்குமாறு கோரியது.
இதனைத் தொடர்ந்து, நீதிமன்றம் அவருக்கு 17 ஆயிரம் ரிங்கிட் பிணை வழங்கியதுடன், இரண்டு மலேசியப் பிணையாளர்களையும் நியமிக்க உத்தரவிட்டது. மேலும், கடப்பிதழை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும், மாதந்தோறும் போலீஸ் நிலையத்தில் முன்னிலையாகவும், வழக்கு முடியும் வரை வாகனமோட்டுநர் உரிமத்தை ஒப்படைக்கவும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.








