ஜசெக, பேரா மாநில அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் காலகட்டத்தில்தான் இந்திய சமூகத்திற்கான நிதி ஒதுக்கீடு ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக, பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும், பாசீர் பெடாமார் சட்டமன்ற உறுப்பினருமான வூ கா லியோங் தெரிவித்துள்ளார்.
2027ஆம் ஆண்டுக்கான பேரா மாநில வரவு செலவுத் திட்டம் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், இந்திய சமூகத்திற்காக 6.5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த 2023ஆம் ஆண்டு 2 மில்லியன் ரிங்கிட்டாக இருந்த இந்த ஒதுக்கீடு, 2027ஆம் ஆண்டில் 6.5 மில்லியன் ரிங்கிட்டாக அதிகரித்துள்ளதாகவும், கடந்த 60 ஆண்டுகளில் எந்தவொரு பேரா மாநில அரசாங்கமும் இந்திய சமூகத்திற்கு இவ்வளவு பெரிய தொகையை ஒதுக்கியதில்லை என்றும் அவர் கூறினார்.
பேரா மாநிலம் முழுவதும் உள்ள தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்காக மேலும் ஒரு மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நிதி உதவி தேவைப்படும் தமிழ்ப்பள்ளிகள், அடுத்த ஆண்டு முதல் மாநில அரசிடம் விண்ணப்பிக்கலாம் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
மேலும், பேரா மாநில அரசாங்கத்தில் ஜசெக அங்கம் வகிக்கும் வரை இந்திய சமூகத்தின் நலன் மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பதுடன், வழங்கிய வாக்குறுதிகளையும் தொடர்ந்து நிறைவேற்றுவோம் என வூ கா லியோங் உறுதியளித்தார்.








