பேராக் மாநிலம், தைப்பிங் மருத்துவமனையின் குழந்தைகள் நலப் பிரிவில் பணியாற்றி வந்த இளம் மருத்துவ அதிகாரி டாக்டர் திலக் ராமன், நேற்று காலை பணிக்குச் செல்லும் வழியில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார்.
UD13 தரநிலையிலான மருத்துவ அதிகாரியாகப் பணியாற்றி வந்த அவர், சிறப்பு மருத்துவராக உருவாகி வந்த நிலையில் உயிரிழந்தது மருத்துவத் துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சர் டாக்டர் ஸுல்கிஃப்லி அஹ்மாட் தெரிவித்துள்ளார்.
மேலும், அவரது மறைவு குறித்து மலேசிய சுகாதார அமைச்சு சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள அவர், குழந்தைகளிடம் மிகுந்த அன்புடனும் கனிவுடனும் நடந்துகொண்ட அர்ப்பணிப்புமிக்க மருத்துவர் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில், நோயாளிகளின் பெற்றோர் மற்றும் சக ஊழியர்கள் பகிர்ந்த நினைவுகள் அவரது மனிதநேயத்தையும் மருத்துவப் பணியில் கொண்டிருந்த அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துவதாகவும் ஸுல்கிஃப்லி அஹ்மாட் தெரிவித்துள்ளார்.








