மலேசியாவில் தற்போதைய சூழலில் பொருள் மற்றும் சேவை வரியான ஜி.எஸ்.டியை மீண்டும் நடைமுறைப்படுத்துவது பொருத்தமானதல்ல என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
மக்களின் வருமானம் ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதுடன், வாழ்க்கைச் செலவு தொடர்ந்து அதிகரித்து வருவதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற எழுத்துப்பூர்வ பதிலில் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
குறைந்த வருமானம் பெறுவோர் தங்களின் வருமானத்தில் பெரும்பகுதியை அத்தியாவசியப் பொருட்களுக்குச் செலவிடுவதால், இத்தகைய வரி அவர்களை அதிகம் பாதிக்கக்கூடும் என்றும் விளக்கப்பட்டுள்ளது.
தற்போதைய விற்பனை மற்றும் சேவை வரியான எஸ்.எஸ்.டி முறையில், வரிச் சுமையை வணிக நிறுவனங்கள் தாங்களே ஏற்றுக் கொள்ளவோ அல்லது நுகர்வோரிடம் மாற்றவோ வாய்ப்புள்ளது.
மேலும், இரட்டை வரிவிதிப்பைக் குறைக்கும் வகையில் தற்போதைய வரி முறையை மேம்படுத்தி வருவதாகவும், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு வரிவிலக்கு அளிக்கும் நடைமுறை தொடரும் என்றும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.








